ஆடாதோடையின் மருத்துவ குணங்கள்


ஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக் கசப்புச் சுவை காரணமாக கால்நடைகள் கூட ஆடாதோடை இலைகளைச் சாப்பிடுவதில்லை.

ஆடாதோடைக்குப் பாடாத தொண்டையும் பாடும் என்கிற பழமொழி உண்டு. ஆடாதோடை இலைகளில் ஒரு முக்கியமான எண்ணெயும், வாசிசீன் என்கிற ஆல்கலாய்டும் உள்ளன. சொல்லபோனால் உலகில் உள்ள சுமார் 250000 மூலிகைகளும் மருத்துவக்குணமுடையவை. ஆனால் சுமார் 50000 வகைகளுக்கே இதுவரை பயன் கண்டறியப்பட்டுள்ளது.

ஆடாதோடை தாவரத்தின் முக்கியமான மருத்துவப் பண்பு சளியை வெளிக்கொண்டு வருவதாகும். இலையைக் குடிநீர் செய்து சாப்பிட்டுவர தொண்டையை எப்போதும் வலுவாக வைத்திருக்கும். சளியைப் போக்கும் தன்மையுடன் வயிற்றுப் பூச்சிகள் அழிக்கும் தன்மையும் ஆடாதோடைக்கு உண்டு.

இலை,பூ,பட்டை,வேர் ஆகியன மருத்துவ பயனுடையவை.ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்த கொதிப்பு இவைகளை குணமாக்கும்.கபத்தை அகற்றும். சிறுநீரை பெருக்கும் தன்மை உடையவை.

இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடித்து வர ஆஸ்துமா நோய் நீங்கும்.

ஆடாதொடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் (மேலேதான்) வைத்து கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதொடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகளை குணபடுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும்.

ஆடாதொடையின் ரசத்தை 20 துளி எடுத்து தேனுடன் கலந்து கொடுக்க வளி வாதம் சம்பந்தப்படட அனைத்து குற்றங்களும் நீங்கும்.

சளி இல்லாமல் புகைச்சலாக ஏற்படும் வறட்டு இருமல் குணமாக 3 கொழுந்து ஆடாதோடை இலைகளைப் பறித்து, மைய நசுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ½ டம்ளர் அளவாகக் காய்ச்சி காலையில் குடிக்க வேண்டும். இதுபோல 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

காய்ச்சல் குணமாக ஒரு டம்ளர் தண்ணீருக்கு 4 ஆடாதோடை இலைகள் வீதம் எடுத்து நசுக்கிக் கொள்ள வேண்டும். இவற்றைத் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். இந்த ஆடாதோடை இரசத்தை, காலை, மாலை ½ டம்ளர் வீதம் சரியாகும்வரை சாப்பிட வேண்டும்.

இந்த இரசம் சாப்பிடும் காலத்தில் பத்தியம் கடைபிடிக்க வேண்டும். செரிக்க கடினமான உணவு, குளிர்ந்த உணவு, புளிப்பான உணவு சாப்பிடுதல் கூடாது. பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments