அமுக்கரா (அஸ்வகந்தா) – மருத்துவ பயன்கள்


அஸ்வம் என்று சொன்னாலே முதலில் நமது மனதில் தென்படுவது, அதன் ஓடும் வேகம், சக்தி, பலம், திடமான உடலமைப்பு போன்றவை ஆகும். மேற்கண்ட குணத்தை தரக்கூடிய ஒரு மூலிகை அதுதான் அமுக்கூரம் என்றழைக்கப்படும் அஸ்வகந்தா வேர்.

அமுக்குரா சூரணம்

தேவையான பொருட்கள்

  • நாட்டு அமுக்குரா - 640 கிராம்
  • சுக்கு - 320 கிராம்
  • திப்பிலி - 160 கிராம்
  • மிளகு - 80 கிராம்
  • ஏலம் - 40 கிராம்
  • சிறுநாகப்பூ - 20 கிராம்
  • இலவங்கம் - 10 கிராம்
  • சீன கற்கண்டு - 1000 கிராம் 


செய்முறை 

அமுகுராவை பொடித்து பால் தெளித்து கொழுக்கட்டை போல பிடித்து, ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி அதன் மேல் வேடு கட்டி அவித்து எடுக்க வேண்டும். இப்படியாக 5 முறை செய்ய நல்ல சுத்தி ஆகும். பாலை ஒவ்வொரு முறையும் மாற்ற வேண்டும்.

சுண்ணாம்பை குழைத்து சுக்குக்கு பூசி வெயிலில் காயவைத்து காய்ந்ததும் தோலை நீக்கி விட்டு பொடித்து வைக்கவும்.

திப்பிலியை கொடுவேலி சாற்றில் ஊறவைத்து, காயவைத்து வறுத்து பொடிக்க வேண்டும்.

மோரில் 2 சாமம் ஊற வைத்து தாழ்ந்த மிளகை எடுத்து கொள்ள சுத்தமாகும்.

ஏலத்தை சிறிது நெய்விட்டு வறுத்து பொடித்து வைக்கவும். சிறுநாகப்பூவை வெய்யிலில் உலர்த்திக்கொள்ளவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கற்கண்டை பொடித்து கலந்து பத்திரப் படுத்தவும். வேண்டும் போது வேளைக்கு அரை மேசைக்கரண்டி வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.


பயன்கள்

சயம், வாத சூலை, வாதகரப்பான், குன்மம், சுரம், பாண்டு, சளி, பசியை தூண்டும், மாதர் மேல் இச்சை உண்டாக்கும், உடல் வனப்பை உண்டாக்கும், வெட்டை, வீக்கம், பித்த மயக்கம் போன்றவை நீங்கும்.  இது ஒரு நல்ல உடல் வலிமையை தரும். இதை சாப்பிட குதிரை பலம் வரும் அதனால் அஸ்வகந்தா என்று பெயர் வந்தது.

அசுவகந்தித் தைலம் 

வையான பொருட்கள்

சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10
சற்றாமுட்டி வேர் பலம் 10

செய்முறை 

இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும்.

இந்த மண்பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும்.

தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. 


பயன்கள்

வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுரம் குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.

Post a Comment

0 Comments