குடும்ப தலைவிகளுக்கு உபயோகமுள்ள வீட்டுக் குறிப்புகள்

 


  1. கம்பளி உடைகள் வைத்திருக்கும் அலுமாரி அல்லது பெட்டியில் கொஞ்சம் வேப்பிலை அல்லது மிளகை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. கண்ணுக்கு தெரியாத பூச்சிகளால் உடைகளில் ஓட்டை விழுவதை இதனால் தடுக்கலாம்.

  2. தேங்காய் எண்ணெய்யை அதிக நாள் வைத்திருந்தால் காறல் வாடை வந்து விடும். கொஞ்சம் கற்பூரத்தைப் பொடி செய்து எண்ணெய்யில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு காறல் எடுக்காமல் இருப்பதுடன் நல்ல மணமாகவும் இருக்கும்.

  3. பிளாஸ்டிக் பக்கெட்டுகளும் குவளைகளும் அழுக்கில்லாமல் சுத்தமாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அழுக்குப் படிந்து நிறம் மங்கியிருந்தால் ஒரு துணியை மண்ணெண்ணெய்யில் நனைத்து நன்றாக தேய்த்து தடவிப் பத்து நிமிடம் கழித்து அதே துணியில் சிறிது சர்ப் பவுடரைப் போட்டுக்கொண்டு மீண்டும் துடைத்தால் அழுக்குகள் அகன்று பளிச்சென்றாகி விடும்.

  4. முகம் பார்க்கும் கண்ணாடி மங்கலாக இருந்தால் துணிக்குப் போடும் நீலத்தை ஈரத்துணியில் தொட்டுக் கொண்டு கண்ணாடியில்  மீது பூசினாற் போல் மெழுகி விட்டு, சுத்தமான துணியால் துடைத்து விட்டால் பளிச்சென்றாகி விடும்.

  5. அலுமினியப் பாத்திரங்களில் படியும்  தீசலை அகற்றுவதற்கு வெங்காயத்தை நறுக்கிப்போட்டு நீர் விட்டு கொதிக்க விடவும்.

  6. புதிதாக வாங்கிய செருப்பும் பூட்சும்  காலைக் கடிப்பது உண்டு. உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகி விடும். கடிக்காது.

  7. வெயிலில் சாமான்களை காய வைக்கும் போது பறவைகள் வந்து கொத்தாமல் இருக்கக் காவல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்பொருளின் மீது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தால் போதும் பறவைகள் வராது.

  8. காப்பி, தேநீர் கறையைப் போக்க அந்த இடத்தைச் சோப்பு கரைத்த நீரில் கழுவிய பின்பு உப்பு நீரில் நனைக்கவும்.

  9. ரத்த கறை எளிதில் போகாது. முதலில் ஹைட்ரஜன் பெராக்சைடிலும் பிறகு அம்மோனியா திரவத்திலும் அந்த இடத்தை முக்கி எடுக்க வேண்டும்.

  10. சிவப்பு மைக்கறை போவதற்கு தக்காளி பழத்தையும் உப்பையும் அந்த இடத்தில் தேய்த்து நீரில் அலச வேண்டும். தயிரைத் தடவி தேய்த்தாலும் போகும்.

Post a Comment

0 Comments